Login Form
Invite Friends
| துயில் நாடகம் - திரௌபதி படினம் |
|
|
|
| Written by பிரசாத் வேணுகோபால் |
| Sunday, 01 May 2011 22:00 |
|
நண்பர்களுக்கு, நான் முன்பு மகாபாரதம் தொடர் எழுதும் போது என் தந்தை பாஞ்சாலி சபதம் நாடகத்திற்காக எழுதிய பாடல்கள் இருப்பதாகவும், அவை கிடைத்தால் சமயம் கிடைக்கும் போது பகிர்வதாகவும் சொல்லி இருந்தேன். அதன் ஒரு பகுதியாகத்தான் இம்மடல்.
அப்பா எழுதி வைத்திருந்தது திரௌபதியின் படினம் மட்டுமே... அதாவது திரௌபதியாக நாடகத்தில் பாத்திரம் ஏற்றுக் கொள்பவர்கள் பேசும் வசனமும், பாடலும் மட்டுமே இதில் இருக்கும். முழு நாடகத்தின் தொகுப்பு இல்லாததால் புரிந்து கொள்தலில் பிரச்சினை ஏற்படலாம். சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளவும்.
பகுதி -1
பாண்டவர்கள் சூதாட்டத்தில் திரௌபதியை பணயமாக வைத்துத் துரியோதனனிடம் தோற்றப் பின், துரியோதனன் தன் தம்பி துச்சாதனனை திரௌபதி இருக்கும் அந்தபுரத்திற்கு அனுப்பி அவளை அரசவைக்கு அழைத்து வரச் சொன்னான். துரியோதனனின் கட்டளையை ஏற்று துச்சாதனன் அந்தபுரத்திற்குச் சென்று திரௌபதியை அரசவைக்கு வருமாறு கூப்பிடுகிறான். அப்போது...
கவி: மட்டும் மருங்கும் மரியாதை யில்லாமல் பொட்டெனவே வந்தழைத்த புத்தியில்லா மைத்துனரே துட்டமுடி உங்கள்அண்ணன் சூழும் சபையில், என்னை யிட்டுவர சொன்னவித மின்னதென்று சொல்லுவீரே...
வசனம்: மரியாதை இல்லாமல் வந்து அழைத்த மைத்துனரே, ராஜராஜாக்கள் நிறைந்த சபையில் உங்கள் அண்ணன், என்னை அழைத்து வரும்படி சொன்னவிதத்தை இன்னதென்று சொல்லுங்கள் மைத்துனரே...
விருத்தம்: என்னையும் சொக்கட்டானில் இசையவே வைத்துத்தோற்ற மன்னவர் எனக்கு சொல்லி வரவழைத்திடுவார் கண்டாய் உன்னையார் கண்டார் உங்கள் அண்ணனையார்தான் கண்டார் பின்னமாய் பேசவேண்டாம் பேசாமல் நடந்திடாயே...
வசனம்: என்னை சூதாடி தோற்ற என்மன்னர்கள் என்னை வரவழைப்பார். உன்னை யார் கண்டார், உன் அண்ணனை யார் கண்டார். அதிகமாக பேச வேண்டாம். நீ நடப்பாய் மைத்துனா...
கவி: மாமி நீ பாராய் உந்தன் மகன் செய்யும் அநியாயத்தை தாமத மன்னர்சூழும் சபைதனில் வரவே சொல்லி காமுகன் போலஎந்தன் கைபிடித்திழுக்க வைத்தான் பூமியில் இவனைபோலும் பொல்லாத கொடுமையுண்டோ...
வசனம்: அய்யோமாமி இந்த அநியாயமுண்டோ, அந்த ராஜசபைக்கு வர சொல்லி உன்மகன் என்கையைத் தொட்டு இழுக்க வந்ததைப் பார்த்தாயா மாமி...
புலம்பல் பாட்டு: அய்யோ நான் என்ன செய்வேன் மாமி யிந்த அநியாயம் தானுண்டோ மாமி தஞ்சமும் நீயே என்மாமி – பெற்ற தாயாரும் நீதானே மாமி இவனை கண்டவுடனே என்மாமி – எந்தன் கால்களும் நடுங்குதடி மாமி என்னைக் காட்டிக் கொடுக்காதே மாமி – என்னைக் காப்பாற்ற வேணுமே மாமி தள்ளிவிட்டால், ஐயோ மாமி – இவன் தள்ளிக் கொண்டு போவான் மாமி வெம்புதே என்னுள்ளம் மாமி – இந்த வேளை காக்கவேண்டும் மாமி...
தர்க்க பாட்டு: துரோகி இதுவென்ன சொல்லடா – என்னை தொடவேண்டாம் நீதூர நில்லடா
துரோகியென் தர்மதுரைகள் அறிந்தாக்கா தூக்கி போட்டு சொன்ன நாக்கையறுப்பாரே...
சங்கடம் இங்கேநீ படிக்கிறாய் உந்தன் சமர்த்தெல்லாம் சொல்லித் துடிக்கிறாய்
முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமோ போடா வக்காகுமா- அட முழுதும் எண்ணாமலேநீ மலைக்கிறாய் வெறியுன்ட நாயைப் போல குலைக்கிறாய்
கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயகுரலல்லாமல் அங்கென்னவோ சொல்லும்
புலம்பல் பாட்டு: ஐயையோ பாவி தெய்வமே இந்த அநியாயம் தானுண்டோ ஓ தெய்வமே தெய்வமே...
கண்ணாளர் தொட்டு கலைக்கும் என் கூந்தலை கடையன் தோடலாமோ ஓ தெய்வமே தெய்வமே
மல்லிகை சூடி மணக்கின்ற கூந்தல் மண்மேல் புரளுதே ஓ தெய்வமே தெய்வமே
சீப்பிட்டு வாரித் திகழுமென் கூந்தல் தெருவிற் புரளுதே ஓ தெய்வமே தெய்வமே...
தர்க்கப் பாட்டு: பேசாதெல்லாம் பேசி பேய் போலத் துள்ளுறாய் பெண்கள் மெச்சவே பெருமையாய் கொள்ளுறாய் நீசனே நீ தத்தி நிலத்தில் விழுகிறாய் நிந்தை எண்ணாமலே நெருப்பில் விழுகிறாய்.
புலம்பல் பாட்டு: ஐயையோ பாவி தெய்வமே நானிந்த அவதி படவிட்டாயோ – ஓ தெய்வமே தெய்வமே
ஐவருக்கும் கைகொடுத்து அருமையா யிருந்தேனே அதற்கோயிப் படிச்செய்தாய் ஓ தெய்வமே தெய்வமே
வந்தவிடந்தனிலே யிந்த விதியெனக்கு வருமென்று நானறியேன் ஓ தெய்வமே தெய்வமே...
- தொடரும். |



