Login Form
Invite Friends
| பைந்தமிழில் மகாபாரதம் - முன்னுரை |
|
|
|
| Written by பிரசாத் வேணுகோபால் |
| Friday, 04 February 2011 18:20 |
|
மகாபாரதம், எனது பத்தாவது வரையிலான பள்ளிக்காலம் முழுவதும் பள்ளிப்பாடத்தில் இல்லாத ஒரு பாடமாக பல பிரசங்கிகளால் எனது ஊர் மூலமாக என்னோடு கலந்த ஒரு பாடம். அது மட்டுமல்ல மகாபாரதச் சொற்பொழிவு நடக்கும் நாட்களின் இரவில் நாடகமாக காட்சிகளும் என்னுள் பதிந்திருக்கிறது. நான் ஆறாம் வகுப்பில் படிக்கும் பொழுது மகாபாரதம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அப்பொழுது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லை. அடுத்த வீட்டிற்குச் சென்று தொலைக்காட்சி பார்ப்பதை எனது பெற்றோர் விரும்பியது இல்லை. ஆனால் மகாபாரதத்தின் மீது இருந்த மோகம் என்னை, எனது வீட்டில் ஏதோ ஒரு பொய் சொல்ல வைத்து பக்கத்து வீட்டிலோ, அல்லது அண்ணன்களின் நண்பர்கள் வீட்டுக்குச் சென்றோ பார்க்க வைத்தது.
இது மட்டுமல்ல மகாபாரதம் என்னுள் குடிவர என் தந்தையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் அவர் அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் நடக்கும் மகாபாரதத் தெருக்கூத்தின் ஒரு நாடகமான பாஞ்சாலி சபதத்திற்கு பாடல் எழுதியவர். பாடல் என்றால் இந்தக் காலத்தைப் போன்றது அல்ல. தெருக்கூத்தில் நடிக்கும் நாடகக் கலைஞர்கள் இயல்தமிழாகப் பேசி நடிப்பதை விட இசைத்தமிழிலேயே அதிகம் நடிப்பர். அப்படிப்பட்ட நாடகமான பாஞ்சாலி சபதத்தின் போது வரும் துரியோதனனுக்கான பாடல் வரிகள், துச்சாதனுனுக்கான பாடல் வரிகள், பாஞ்சாலிக்கான பாடல் வரிகள், பாஞ்சாலி சபதம் முடிந்த பின் வரும் பாண்டவர்களின் சபதத்திற்கான பாடல் வரிகள் என அனைத்தையும் எழுதி இருந்திருக்கிறார். இவையேதும் எனக்கு எனது பள்ளிப் பருவத்தில் தெரியாது.
ஒரு முறை அப்பாவின் பெட்டியைச் சுத்தம் செய்யும் பொழுது ஒரு பை எனக்கு கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தால் அதனுள் நாடக ஒப்பனையில் உபயோகப்படுத்தப்படும் சில ஒப்பனைப் பொருட்கள், கரையான் அரித்திருந்த பாஞ்சாலி சபதம் நாடகத்திற்கான பாடல்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகம் என சில என் கண்ணில் பட்டது. அந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் அதில் என் தந்தையின் கையெழுத்து. ஆச்சரியப்பட்டு என் அம்மாவிடம் கேட்க அது அப்பா எழுதியது என்றும் நானும் எனது அண்ணன்களும் பிறக்கும் முன்பு அது எழுதப்பட்டது என்றும் சொன்னார்கள். அப்பாவுடன் கலந்திருந்த மகாபாரத மோகமும் எனது மகாபாரதம் மீதான மோகத்திற்கு காரணமாக இருக்கலாம்.
எனது பள்ளிப்பருவத்தின் போது (எத்தனையாவது வகுப்பு என்று மறந்துவிட்டேன்) துக்ளக்கில் சோ அவர்கள் மகாபாரதம் எழுதி வந்தார். அன்றைய நாட்களில் எனது தந்தை குமுதம் மற்றும் துக்ளக் புத்தகத்தின் தொடர் வாசகர். அதனால் சோ அவர்களின் பார்வையில் மகாபாரதத்தைச் சற்று விரிவாகவே படித்து வந்தேன். எனது தந்தைக்கு துக்ளக்கின் மீதான நம்பிக்கை போன போதும் மகாபாரதத்திற்காக எங்கள் வீட்டில் துக்ளக் வாங்கி வந்தோம். அதையெல்லாமும் தொகுத்து புத்தகமாக்கி வைத்திருக்கிறோம். இந்த எனது மகாபாரதத்தின் மீதான மோகம் என்னை விட என் வீட்டில் உள்ளவர்களுக்கே அதிகம் என்பேன் நான். சோ எழுதிய மகாபாரதத் தொகுப்பு எனது பள்ளிப்பருவத்தில் எனக்கு அறிமுகமானாலும் எனக்கு மகாபாரதம் அதற்கு முன்பு அறிமுகமானது சுவாமி சித்பவானந்தா அவர்களால் இயற்றப்பட்ட மகாபாரதம். அந்தக் காலத்தில்(1985) அப்புத்தகம் எனது தந்தை அவர்களால் பத்து ரூபாய்க்கு வாங்கப்பட்ட புத்தகம் அது.
இவையனைத்தும் தான் என்னுள் மகாபாரதம் குடிபுகுந்த கதை. மகாபாரதத்தை சந்திர வம்சத்தின் தொடக்கத்தில் இருந்து விரிவாகப் படிக்க வேண்டுமென்றால் அது துக்ளக்கில் சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் பேசுகிறது நல்ல தொகுப்பு. இதனை சோ அவர்கள் புத்தகமாக வெளியிட்டாரா என எனக்குத் தெரியாது. ஆனால் நான் இங்கு உங்களுடன் பகிரப் போவது எனக்கு முதன் முதலாக மகாபாரதம் அறிமுகமான சுவாமி சித்பவானந்தா அவர்களால் பகிரப்பட்டது. இதன் நடுவில் எனது சிறு வயதில் மகாபாரதம் பிரசங்கத்தில் கேட்ட கிளைக் கதைகள் நினைவுக்கு வந்தால் அதுவும் எழுதப்படலாம்.
ஆனால் நான் எழுதப் போவது சுவாமி சித்பவானந்தாவால் இயற்றப்பட்ட நூலின் பிரதி ஆகும். நான் ஆசிரியன் அல்லன். நான், அவர் இயற்றிய நூலினை நண்பர்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு தபால்காரன் மட்டுமே என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
| Last Updated on Friday, 23 March 2012 06:43 |



