Login Form



Invite Friends



Want to invite your friends to Kalvithulir
Click Here

Giveaway of the Day


ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி PDF Print E-mail
Written by செபரா   
Wednesday, 04 January 2012 17:18
அன்புள்ள நண்பர்களுக்கு,

கீழ்க்குறிப்பிடப்பட்ட ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதியினை, அண்மையில் கல்லிடைக்குறிச்சி சென்ற பொழுது நான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எனக்குத் தெரிந்த அளவில் இவ்வந்தாதி அதிகம் அறியப்படாத ஒன்று.   திரு கி.வ.ஜெகன்னாதன் முதல் பல தமிழறிஞர்கள் பாராட்டிய ஒன்று. தமிழ் மொழியினை உலகறியச் செய்வதில், இத்தகு அருமையான மறந்த/மறையும் நிலையில் உள்ள தமிழ்ப் பாடல்களின் தொகுப்பை வெளியிடுவதன் மூலம் என்னாலியன்ற ஒரு சிறிய பணி.

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி

 

            கருத்தாக்கம் திரு S.R.கணபதி செட்டியார் - அரங்கேறியது 16-10-1964

 

கவிதை என்பது ஏதோ யாப்பிலக்கணத்தைப் படித்து, எதுகை, மோனைகளை உருவாக்கி, சொற்றொடர்களை அமைத்து லகர, ழகரங்களை விளையாடவிட்டு, ஒரு கொத்தன் செங்கற்களை வரிசையாக அடுக்கி சாந்துபூசி வீடு கட்டுகிற வித்தை போன்றதல்ல. இவையெல்லாம் சிறப்பான கவிதைக்கு வேண்டிய ஒன்றென்றாலும், இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று, உண்மையான கவிதைக்கு உண்டு.

 

அது அக்கவிதையினை உருவாக்குபவரின் உள்ளுணர்வையும், ஆத்மார்த்தமான குணப்பண்பையும் வெளிக்கொணர்வதாகும். தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறத் தன் உள்ளத்தைத் திறந்து காட்டுகிற மேன்மைதான் கவிதை. ஆகவே உணர்ச்சித் துடிப்பும், உள்ளக் கிளர்ச்சியும் கற்பனைப் பெருக்கும் பக்திப்பரவசமும் சேரும் பொழுது, அக்கவிதை உலகோர்க்கு அமுதாகவும், ஆத்மத்திற்குத் தளமாகவும், புலவோர்க்கு விருந்தாகவும், பக்தர்களுக்கு பக்திப் பண்ணாகவும் அமைகிறது.

 

அந்தாதி என்பது முதற்பாட்டின் கடைசிப் பதமானது அடுத்து வரும் பாட்டின் முதல் சொல்லாக அமைவதாகும்.

 

“எளிமை இனிமை ஏற்புடைத்தன்மை, நளினம் மொழியினுக்கு இன்னாங்கும் அணிகலன்” என்பதற்கேற்ப பாட்டுக்களில் நிரவி வருகிற சொல்லாற்றலும், விரவி வருகிற சந்தக் கட்டும், ஒன்றுக்கொன்று உரசலோ, பிசிரோ, மோதலோ இல்லாது, தொடர் விட்டுப்போகாமல், தாளம் கெட்டுப்போகாமல் சொற்களைப் பிணைத்திருக்கும் கவர்ச்சி எல்லோரையும் ஈர்க்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துகளும் இருக்க வாய்ப்பில்லை. இவ்விதமாக ஸ்ரீ காமாக்ஷி அன்னையின் மேல் நூறு பாக்கள் அமைத்திருப்பது, ஒரு அருட்பிரசாதமாகும். அனுபவித்து வாசிப்போர்க்கும் அவள் அருள் பரிபூரணமாக நிலைத்து நிறகும்.

 

காலப்போக்கில் இவ்வரிய படைப்புக்கள் எவரும் அறியா வண்ணம், மறந்து, மறைந்து போகிறது. தற்செயலாக நான் கண்டெடுத்த இவ்வரிய படைப்பு, எல்லோரும் தமிழை அறிந்து அனுபவிக்க, எளியேனின் சிறு முயற்சி. முன்பே அறியப்பட்டிருந்தால், நினைவு படுத்திக் கொள்ள வாய்ப்பு                      

 

 

காப்புச் செய்யுள்

பூமணக்குங் காமாட்சிப் புங்கவிதாட் கந்தாதி

நாமணக்கப் பாடுதற்கு நற்றுணையே – தேமணக்கும்

மான்மருகன் கந்தன் மதயானை மாமுகத்தான்

ஆன்மருவுங் கோமலர்த்தாள் ஆம்.

 

நூல்

 

ஆத்தாளைக் காஞ்சி அறம்வளர்த் தாளை

அருளொழுகக்

காத்தாளைக் கஞ்ச மலர்க்கரத் தாளைக்

கனகசபைக்

கூத்தாளை மாதவக் கோலம்பூண் டாளைக்

குவலயங்கள்

பூத்தாளைக் காமாட்சி பொற்றாளைப் போற்றிப்

புகழுதுமே!!                   

1

 

பொருளுரை – அகில உலகினுக்கும் அன்னையாக இருப்பவளை, காஞ்சி மாநகரில் நாழி நெல் கொண்டு தன் தாமரை மலர்க்கரத்தால் உலகம் அனைத்திற்கும் உணவளித்து காத்தவளை, பொற்சபையில் இறைவனுடன் இணைந்து நடனமாடியவளை, இறைவனை அடைய, காஞ்சியில், மாமரத்தடியில் பெருமைதரும் தவக்கோலம் பூண்டவளை, அகில உலகமும் அவளாகவே ஆனவளை, (எங்கள்) அன்னை காமாட்சித்தாயவளின் பொற்றாளைப் போற்றிப் புகழ்ந்து பாடுவமே!!

(தொடரும்)

 

இத்தொடர் ஆசிரியர் திரு.செபரா பற்றி அறிய:

http://www.mazhalaigal.com/management/team/team-001/mglt015spr_ramamurthy.php

Last Updated on Thursday, 05 January 2012 16:04